வியாழன், 7 ஜூலை, 2011

நாகர்கோயில் பகுதி மக்கள் விரைவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்! பதிவுகள் நடக்கின்றன


வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின்  எல்லைக்குட்பட்ட  இரு கிராமசேவையாளர் பிரிவுகளில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மீளக்குடியமர்வு இடம்பெறவுள்ளது.
நாகர்கோயில் மேற்கு, நாகர்கோயில் தெற்கு ஆகிய இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான பதிவுகள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக வடமராட்சி கிழக்குப் பிரதேச செலயர் என். திருலிங்கநாதன் தெரிவித்ததாவது:
இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த நாகர்கோயில் மேற்கு, நாகர்கோயில் தெற்கு ஆகிய பகுதிகளில் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 13 ம் திகதிக்கு முன் இந்தப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் வடமராட்சி கிழக்கின் நாகர்கோயில் மேற்கு பகுதியில் 158 குடும்பங்களைச் சேர்ந்த 557 பேர் இதுவரை மீளக்குடியமர பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோயில் தெற்கு பகுதியில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் இதுவரை மீளக்குடியமர விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது குடத்தனை பிரதேசத்தில் வலிக்கண்டி பகுதியிலும், கற்கோவளம், புனிதநகர் பகுதியிலும் சுனாமித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நிரந்தர வீடுகளில் வசித்து வருகின்றனர் என்றார்.

2 கருத்துகள்:

siva சொன்னது…

நன்றி அண்ணா.மேலும் செய்திகளை எதிர்பார்க்கின்றோம் ...

றம்போ சொன்னது…

உங்களின் பகிர்வுக்கு நன்றி! நிச்சயம் பல புதிய தகவல்களுடன் வருவான் உங்களின் றம்போ