செவ்வாய், 19 ஜூலை, 2011

மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்

பிரிட்டனில் ரயிலில் வைத்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார் இலங்கைத் தமிழர் ஒருவர். இவரின் பெயர் வி. எஸ். வாசன். வயது - 64. ஐந்து பிள்ளைகளின் தந்தை. மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் பெற்று லண்டனில் வாழ்ந்து வருகின்றார். 

இவரது பிள்ளைகளில் இருவர் 1996 ஆம் ஆண்டு எத்தியோப்பிய விமானம் ஒன்று கோமரோஸ் தீவில் விபத்தில் சிக்கியபோது இறந்து விட்டனர். 

வாசன் மிகுந்த பிரயாசைக்காரர். நேர்மையானவர். அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். இதனால் இவர் மீது அபிமானமும், மரியாதையும் மிகுந்த கூட்டம் ஒன்று லண்டனில் உள்ளது. 

ஓய்வூதியர். பல்லினங்களைச் சேர்ந்த மக்களும் இவருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆங்கிலேய நண்பர்களும் ஏராளம். 

இவர் Letchworth நகரத்தில் உள்ள ஆங்கிலேய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வார இறுதி விடுமுறையை கழிக்க சென்று விட்டு பிரிட்டிஷ் புகையிரதத்தில் கடந்த 10 ஆம் திகதி திரும்பி வந்து கொண்டு இருந்தார். 

இப்புகையிரத பயணத்தின்போது மறக்க முடியாத அநுபவம் ஒன்று இவருக்கு கிடைத்தது. 

இவரது ஆசனத்தோடு இணைந்த ஆசனங்களில் இளம்பிராயத்தினர் ஐவர் அமர்ந்து இருந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்கள். 

வலியால் ஒரு பெண் அழுகின்றமையை பார்த்து இந்த ஆங்கிலேயர்கள் நையாண்டியாக சிரித்துக் கொண்டிருந்தனர். 

அங்கிருந்த பயணிகள் என்ன நடக்கின்றது? என வேடிக்கை பார்த்தார்களே ஒழிய பெண்ணுக்கு உதவ முன் வந்து இருக்கவில்லை. 

சீரியஸான பிரச்சினை ஒன்று போய்க் கொண்டு இருக்கின்றது என்று உணர்ந்தார் வாசன். 

என்ன பிரச்சினை? என்று அப்பெண்ணுடன் கூட வந்திருந்தவரிடம் வினவினார். 

பிரசவ வேதனையால் அப்பெண் துடித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார். 

அப்பெண்ணுக்கு உதவ முன்வருமாறு சக பயணிகளிடம் கேட்டுக் கொண்டார். 

இரு பெண்கள் மாத்திரம் உதவ முன் வந்தனர். 

ஏனையோரை வேறு பகுதிக்கு செல்லச் சொன்னார். 

ரயிலை அவசரமாக நிறுத்துகின்றமைக்கான நெம்புகோலை பிடித்து இழுத்தார். 

மெதுவாக நகரத் தொடங்கியது புகையிரதம். 

கைப்பையை திறந்து இரண்டு துணிகளை வெளியில் எடுத்தார். 

தரையில் ஒரு துணியை விரித்தார். அதில் பெண்ணை கிடத்தினார். 

பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்கள். தேற்றினார்கள். 

பெண்ணை பிரசவத்துக்கு தயார்ப்படுத்தினர். 

பெண் பிரசவ வேதனையின் உச்சத்தில் கத்தத் தொடங்கினார். குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. 

குழந்தையின் தலை வெளியே வந்தது. உடல் வெளியே வருவது வெகு சிரமமாக இருந்தது. 

குழந்தையின் உடலை வாசன் மெதுமெதுவாக வெளியே எடுத்தார். 

மற்றத் துணியின் மேல் குழந்தையை கிடத்தினார். 

தாயின் மார்பில் குழந்தையை வைத்தார். 

இரு ரயில் பணியாளர்கள் வந்தனர். நிலைமையை புரிந்து கொண்டனர். அடுத்த நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. தயார் நிலையில் இருந்த அம்புலன்ஸ் வண்டியில் தாயும் சேயும் மிகவும் பத்திரமாக ஏற்றப்பட்டனர். 

பெரியவர் வாசனை கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார் அப்பெண்.

கருத்துகள் இல்லை: