சனி, 30 ஜூலை, 2011

யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்ய வந்த யேர்மன் மாப்பிள்ளை தரகரைத் தாக்கி விட்டு ஓட்டம்

யேர்மனியில் இருந்து வந்த மாப்பிள்ளை மணப் பெண்ணிற்கு 7 மாதங்களேயான தம்பி இருப்பதை அறிந்து தனக்கு சம்பந்தம் பேசிய தரகரை நையப் புடைத்து விட்டு மீண்டும் யேர்மனி சென்ற சம்பவம் தென்மராட்சியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனியில் 9 வருடங்களாக குடும்பத்தினருடன் வசித்து வந்த 27 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞனுக்கு அவனது குடும்ப்ததினர் திருமணத் தரகர் மூலமாக யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடியுள்ளார்கள்.

இந் நிலையில் அத் தரகரினால் கடந்த ஏப்ரல் மாதம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயப்படுத்தி இருந்துள்ளார்கள். திருமணம் செய்வதற்காக வருகின்ற ஆவணி மாதம் நாள் எடுத்து விட்டு மாப்பிளை தனது தாய் மற்றும் சகோதரியுடன் இரு மாதங்கள் விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த அவரை அப் பெண்ணின் தகப்பன் சந்தித்ததாக தெரியவருகின்றது. தானும் தனது மனைவியும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் ஆனால் தனது மனைவிக்கு தற்போது 7 மாதக் குழந்தை இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

மிகுந்த மது போதையில் இருந்த அவரது பேச்சை நம்பாது மாப்பிளை வீட்டார் திருமணத் தரகரை அழைத்து விசாரித்து உள்ளார்கள். அப்போது திருமணத் தரகர் தாய்க்கு குழந்தை இருப்பது உண்மை எனவும் ஆனால் தந்தை சொல்வது போல் நீண்ட காலம் பிரிந்து வாழவில்லை என்றும் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கமே தந்தை பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட திருமணம் செய்ய வந்த இளைஞன் பாய்ந்து சென்று தரகரை நையப்புடைத்துள்ளான். அத்துடன் மணப் பெண்ணின் தாய்க்கு இவ்வாறு குழந்தை இருப்பதை ஏன் முதலில் சொல்லவில்லை என கேட்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தரகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள் மணப்பெண்ணின் தாயின் சகோதரர் குறிப்பிட்ட இளைஞனின் வீட்டுக்கு மது போதையில் வந்து தகராறு செய்ததாகவும் இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறையிட்டு விட்டு தற்போது யேர்மன் திரும்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.


கருத்துகள் இல்லை: