செவ்வாய், 26 ஜூலை, 2011

மாவட்டம் தோறும் பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டின் சகல மாவட்டங்களிலும் கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாவட்ட அடிப்படையில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

அநுராதபுர மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக் கூடத்தை பார்வையிடச் சென்ற வேளையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

6 ஆவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சி எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று அநுராதபுரம் ஓயமடுவ பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

அதன் போது அதிகாரிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தக் கண்காட்சிக்குச் சமாந்தரமாக அநுராதபுர மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

எதிர்காலத்தில் நாட்டின் சகல பகுதிகளிலும் கிராமிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் மாவட்ட மட்டத்தில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைத்து பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான பொறுப்பை தாம் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 


கருத்துகள் இல்லை: