புதன், 27 ஜூலை, 2011

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!


சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சிக்கும் இலங்கையர்கள் இனிமேல் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் முடிவில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவது தொடர்பான உடன்படிக்கையொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு அமைய அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இனிமேல் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ஏற்கனவே 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே புதிதாகச் செல்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் (UNHCR) 2011 ஆம் ஆண்டு ஜூலை, 25 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மாத்திரமே படிப்படியாக அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவுள்ளனர் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன் மூலமே பிராந்தியப் பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டமுடியும் என அவுஸ்திரேலியா நம்புகிறது. ஆட்கடத்தல் பிரச்சினை தொடர்பாக இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் அவுஸ்திரேலியா இணைந்து செயற்படுகிறது என்றும் உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: