ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவில் 'ஐரேன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள ‘ஐரேன்’ சூறாவளி அபாயத்தினால் இலங்கையருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 20 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் தோன்றிய ‘ஐரேன்’ என்ற சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை நேற்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரேன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜினியா, மேரிலண்ட், வடகரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் பிரதான 5 விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம், தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0012023520355  என்ற தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: