தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உடனான சந்திப்பில், முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தமிழர்களுக்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார்.
எனவே தான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்தும் விதமாக, சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ள இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதம்தோறும் ரூ.1000-ஐ ஓய்வூதியமாக பெறுவார்கள்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக