புதன், 17 ஆகஸ்ட், 2011

அம்மனுக்கு கோவில் எடுத்து பூசை செய்யும் முஸ்லிம் பெண்


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்கிற கிராமத்தில் மாரியம்மனுக்கு கோவில் எடுத்து பூசை நடத்துகின்றார் முஸ்லிம் பெண் ஒருவர். ஆலயத்தின் பெயர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். முஸ்லிம் பெண்ணின் பெயர் பஷீரா. சொந்த செலவில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்கின்றார்.
தீபா ஆராதனை, பூசை என்று அத்தனை சடங்குகளையும் காலையும், மாலையும் இவரே நடத்துகின்றார். பர்தா அணிந்து கொண்டுதான் வழிபாடுகள் மேற்கொள்கின்றார். இவர் பூசைக்கு உரிய மந்திரங்களை பக்கத்து ஊர்க் குருக்கள் ஒருவரிடம் இருந்து கற்றுக் கொண்டார். கையில் அம்மன் படத்தை பச்சை குத்தி வைத்து இருக்கின்றார்.
இவரது கனவில் பத்து வருடங்களுக்கு முன்னர் அம்மன் தோன்றி இருக்கின்றார். கோயில் கட்டச் சொல்லி திருவாய் மலர்ந்து இருக்கின்றார். ஆரம்பத்தில் கருங்கல்லால் ஆன அம்மன் சிலை ஒன்றை மட்டும் வைத்து வழிபட்டு வந்தார். பின்னர் வெண்கலச் சிலை வைத்துக் கும்பிடலானார். வேப்ப மரம், சூலாயுதம், சிறு தெய்வங்களின் சிலைகள் என்று ஆலயத்தில் அமர்க்களம்.
இவரின் வீடு இருக்கின்ற தெருவில் மற்ற எல்லோரும் இந்துக்கள். ஆலயத்தை தினமும் தரிசிப்பார்கள். பஷீராவின் இவ்வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு கணவர் ஜின்னா பக்க துணையாக இருந்து வருகின்றார். ஆனால் பஷீராவின் அம்மன் வழிபாடு உறவினர்களுக்கும், பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் பிடிக்கவே இல்லை. ஏனெனில் உருவ வழிபாட்டை இஸ்லாம் தடை செய்து உள்ளது.

பஷிராவை உறவினர்கள் கழித்து வைத்து இருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு பஷீரா மணமக்கள் தேடிச் செல்கின்றபோது அம்மன் வழிபாடு சம்பந்தப்பட்ட விடயம் பூதாகரமாகி திருமணங்கள் ஆரம்பப் பேச்சுக்களிலேயே குழம்பி விடுகின்றன. அதே நேரம் முஸ்லிம் கடும்போக்காளர்களால் இவருக்கு படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை ஒன்றும் அம்மன் மீதான பஷீராவின் பக்தியை குலைக்கவே இல்லை.
இத்தனைக்கும் பஷீரா மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓலைக் குடிசை ஒன்றில்தான் வசிக்கின்றார்கள். கணவர் பரோட்டா கடை ஒன்றை நடத்துகின்றார். ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கின்ற இடம்கூட பூராசாமி மானியம் என்கிற அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானதாகவே இருந்தது.
இவர் அம்மனுக்கு சிலை வைத்து கும்பிடுகின்றமையை அறிந்த அறக்கட்டளைக்காரர்கள் நிலத்தை இவருக்கு கொடுத்து உள்ளார்கள். சமய நல்லிணக்கத்துக்கு இந்த ஆலயம் நல்ல ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

கருத்துகள் இல்லை: