சனி, 20 ஆகஸ்ட், 2011

தமிழ் கூட்டமைப்பின் முக்கிய முடிவு இன்று! எம்.பி.கள் கூடி ஆராய்ந்த பின் அறிவிப்பர்!- சுரேஷ் பா.உ.


அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்து அடுத்த அரசியல் நகர்வு குறித்து முடிவு செய்வர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசும், கூட்டமைப்பும் கடந்த 7 மாதங்களாகப் பத்து தடவைகளுக்கு மேல் சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேச்சு நடத்தியபோதும் ஆக்கபூர்வமான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
நடந்த பேச்சுகளில் அரச தரப்பு உறுதி அளித்தபடி எந்த விடயங்களும் நடைபெறவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. 30 வருடப் பிரச்சினைக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு கண்டுவிட முடியாது என்று அரசு கூறுகின்றது.
இதை அடுத்து தீர்வு குறித்த மூன்று முக்கிய கூறுகளைத் தெளிவுபடுத்தும்படி அரசுக்கு இருவார காலக்கெடுவை இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்பு வழங்கி இருந்தது.
அரசின் கட்டமைப்பு, மத்திய மற்றும் மாகாண அலகுகளுக்கு இடையிலான பகிர்வுகள் பங்கீடுகள், நிதி மற்றும் வரி அறவீடுகள் ஆகிய மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்துமாறே கூட்டமைப்புக் கேட்டிருந்தது.
இந்த மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்தினால் அடுத்த கட்டப்பேச்சுக்கு நாள் குறிக்கலாம். இல்லையேல் அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது.
ஆனால், அரசு இதற்கான பதிலைத் தரவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நகர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: