வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி!- திருகோணமலையில் சம்பவம்


திருகோணமலை, சங்கமம் கிராமத்தில் மர்ம மனிதனின் தாக்குதலில் இருந்து இளம் பெண்ணொருவர் மயிரிழையில் தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் டபிள்யு.பி. நிதிசானி (வயது21) என்ற இளம் பெண்ணே தாக்குதலில் இருந்து தப்பித்தவராவார்.
சங்கமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வேலை முடிந்து கணேஸ் வீதி வழியாக இந்த யுவதி சென்று கொண்டிருந்த போதே சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யுவதியை மறித்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.
யுவதியை பிடித்த மர்ம மனிதர் தன் வசமிருந்த கத்தியை எடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்த போது யுவதி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து அயலில் நின்றவர்கள் ஒன்றுகூடியதை அடுத்து மர்மமனிதன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளான.
இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தனக்கு நேர்ந்த ஆபத்து குறித்து நிதிசாஷினி விபரிக்கையில்:
எனது சொந்த இடம் குருணாகல் ஆகும். தொழில் காரணமாக இங்கு வந்து தங்கியுள்ளேன். மாலை 5.45 மணியளவில் வேலை முடித்து பஸ்ஸில் வந்து கணேஸ் வீதியில் இறங்கி சங்கமம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.
கணேஸ் வீதி பள்ளிக்கு முன்பாக உள்ள வீதியில் நான் வரும்போது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென எனக்கு முன் வந்து என்னை மறித்து எனது இடது மார்பகத்தைப் பிடித்தார்.
அதேநேரம் பையிலிருந்து எதனையோ எடுக்க முயன்றவேளை நான் கூச்சலிட்டுக் கத்தினேன். இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை பக்கமாக தப்பிச் சென்று விட்டார்.
எனக்கு இரு நகக்கீறல் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. வந்த நபர் சிவப்பு தலைக் கவசத்தையும் அணிந்திருந்தார்.
அவர் தப்பியோடும் போது கத்தியொன்றின் உறையையும் கைவிட்டுச் சென்று விட்டார். இதனையடுத்து பொலிஸுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் பொலிஸார் வராததால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டோம் என்று தெரிவித்தார்.
மர்ம மனிதன் நேற்று முன்தினமிரவு 7 மணியளவில் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க்கிராமத்தில்புகுந்து குளித்துக்கொண்டிருந்த சண்முகம் சாந்தி (வயது 26) என்பவரின் கையை பிடித்துள்ளார். அவரால் விறாண்டப்பட்ட கைகைளையும் சாந்தி குறித்த இடத்தில் நிற்பதையும் அவரது தகப்பனையும் அதனைக்கண்ட அவரது மகள் வேந்தினியையும் பீதியில் உறைந்திருக்கும் குடும்பத்தினரையும் படங்களில் காணலாம்.





கருத்துகள் இல்லை: