சீனாவின் ஷென்ஷேன் நகரில் ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தொடக்கம் 22 ம் திகதி வரை இடம்பெறவிருக்கும் 26 வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2011 ல் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒருவர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட அரசறிவியற்றுறையில் கல்விகற்கும் மாணவன் தர்மரட்ணம் திரோன் கொடுதோர் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தடகள விளையாட்டு அணியின் வீரராக 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இவர் முருங்கன், மன்னாரிலிருந்து சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலைப் பருவத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்ததோடு பல்கலைக்கழகத்தில் தடகள விளையாட்டு அணியிலும் உதைபந்தாட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
கடந்த 3 வருடங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் 4x100 மீற்றர், 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் நீளம் பாய்தலிலும் பங்குபற்றி பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இவரது சிறப்பான 400 மீற்றர் ஓட்ட திறமையினைக் கருத்திற் கொண்டு இலங்கை பல்கலைக்கழக அஞ்சலோட்ட அணியின் வீரராக இவர் தெரிவு செய்யப்பட்டு மேற்படி போட்டியில் பங்குபற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா செல்லும் யாழ்.பல்கலை வீரனுக்கு சரவணபவன் எம்.பி பயண அனுசரணை
26 ஆவது உலகப் பல்கலைக் கழக விளையாட்டு விழா எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை சீனாவின் ஷென் ஷேன் நகரில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் யாழ். பல்கலைக்கழகத் தடகள வீரனான தர்மரட்ணம் திரோன் கொடு தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணத்துக்கான அனுசரணையை வழங்குகிறார்.
இதில் பங்கேற்கும் யாழ். பல்கலைக்கழகத் தடகள வீரனான தர்மரட்ணம் திரோன் கொடு தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணத்துக்கான அனுசரணையை வழங்குகிறார்.
இந்த வீரன் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர் இந்த அனுசரணையை வழங்குகிறார்.
சர்வதேச ரீதியில் தமிழ் வீரர்கள் விளையாட்டுக்களில் பிரகாசிக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுசரணையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வீரனான திரோன் கொடுதோர் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தமிழனத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்துத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக