செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

கடற்றொழிலாளர் சமூகத்தின் நலன்களுக்காக தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் எதிர்கொண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறும் செயற்பாடுகளால் எமது கடற்றொழிலாளர்கள் பாரிய தொழில் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். எமது கடற்றொழிலாளர் சமூகத்தின் நலன்களுக்காக தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்கொண்டு வருகின்றார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கரையோரப் பிரதேச இணைப்பாளர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரெட்ணகுமார் தெரிவித்தார். 

நேற்று (10) வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சீவரெத்தினம் லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் எமது கடற்றொழிலாளர்கள் பாரிய பங்களிப்பைச் செய்து வந்தனர். தற்போது இடம்பெயர்வுகளை எதிர்கொண்ட காலத்திலிருந்து தமது தொழில் வளங்களை இழந்தனர். அத்துடன் எமது கடல் வளங்களை இந்திய ரோலர்கள் வாரிச் சுருட்டிச் செல்கின்றனர். 

ஆயினும் இங்கு பல கட்சிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் டக்ளஸ் தேவானந்தா ஒருவர் மட்டுமே எமது கடற்தொழிலாளர் மக்களின் நலனுக்காக உழைத்து வருகின்றார். இந்திய ரோலர்களின் அத்துமீறல் தொடர்பாக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவின் போது கூட அங்கு வந்த தமிழக மீனவப் பிரதிநிதிகளுடன் எமது பிரதிநிதிகளைப் பேச வைத்து எமது தொழிலாளர்களின் நிலைகளையும் அவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்தார். எல்லை மீறி நுழைந்த இந்திய ரோலர்களை வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சிறைப்பிடித்த போது எமது கடற்றொழிலாள மக்களின் நலனுக்காக நியாயப்பாடுகளை எடுத்துரைத்திருந்தார். அதனால் தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் எதிர்கொண்டார். 

எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக அவர்களின் வாழ்வாதார உயர்ச்சிக்காகவும் பணியாற்றுவதற்காக என்னிடம் கரையோரத்திற்கான பொறுப்புக்களை வழங்கியுள்ளார். முன்னர் நான் பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளேன். எனவே கடற்றொழிலாளர்களின் குறைகளை அறிவேன். தற்போது மண்ணெண்னை மானியம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பான விபரங்களை சங்கத்திடம் கோரியுள்ளோம். அதனையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் எனத் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: