சனி, 1 பிப்ரவரி, 2014

மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்...!


மாகாணசபை நிர்வாகத்தால் கல்வித்துறையில் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது என திடமாக நம்புவதாக பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். 

அணமையில் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வு நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு த.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இப்பாடசாலை இடப்பெயர்வுக்குப் பின்னர் அல்லாரை நலன்புரி நிலையத்தில் இயங்கி வந்த காலம் தொடக்கம் நாம் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வந்துள்ளோம். கடந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து மேலத்தேய பாண்ட் வாத்தியக் கருவித் தொகுதிகள் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஒதுக்கீட்டிலிருந்து பெற்றுத் தரப்பட்டுள்ளது. தற்போது மாகாணசபையில் அரியாசனங்களை அலங்கரித்துக் கொண்டுள்ள கடந்த நான்கு மாதங்களில் எதனைச் சாதித்தார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம். மாகாணசபை நிர்வாகத்தால் கல்வித்துறையில் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்யப்படவில்லை. எனவே  மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது என திடமாக நம்புவதாகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அறிவுத்திறன் வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய பிரதிக் கல்விப் (நிர்வாகம்) பணிப்பாளர் திரு யோ.ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றிக் கேடயத்தை வழங்கினார். இல்ல மெய்வன்மை திறனாய்வு நிகழ்வில் எல்லாளன் இல்லம் முதலாம் இடத்தையும் பண்டாரவன்னியன் இல்லம் இரண்டாம் இடத்தையும் சங்கிலியன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

கருத்துகள் இல்லை: