ஆழிப் பெருங்கடலோரம் வெற்றிலைக்கேணி எனும் தமிழர் வாழ்வியலில் மறக்க முடியாத நாமம் கொண்ட அழகிய கடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வின் அடையாளமாக, செல்வவிநாயகர் அருளமுதம் மலர்வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இதில் அருளாசி உரைகளை நல்லை ஆதீனமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள், பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கனகசிவ குமாரக்குருக்கள் சர்வ போதகாசிரியர் இரத்தின பாலகிருஸ்ண குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
மலரின் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி உபபீடாதிபதி கலாநிதி.செல்வி.நி.நல்லையா நிகழ்த்தினார். மலரின் முதற்பிரதியை யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெற்றுக் கொண்டார்.
நயப்புரையை யாழ். நெல்லியடி மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் நடராஜா தேவராஜா வழங்கினார். சிறப்புரையை வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் ஆற்றினார்.
மலர் வெளியீட்டு நிகழ்வின் பின்னர் சிறீதனர் எம்.பி கருத்துரை வழங்கும்போது,
புகழ்பூத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிலைக்கேணி எனும் நெய்தல் நிலத்தில் இந்த மக்களின் நம்பிக்கையின் வடிவமாகி பல்வேறு இயற்கை மற்றும் மிக மோசமான போர் இடர்கள் எதிர்வந்த போதும் நம்பிக்கையின் பால் இங்கு இந்த ஆலயத்தை சுற்றி எழுப்பப்பட்ட வாழ்வு இன்று தொடர்கின்றது.
இடர்கள் வரும்போது மனிதர்கள் தங்களை மீறிய எல்லையற்ற சக்திவடிவமாக இருக்கும் ஆண்டவனை நோக்கி ஓடுவது இயல்பானது.
மனிதர்கள் மட்டுமல்ல அவர்தம் வரலாறுகளும் கலை பண்பாடுகளும் கோயில்களை காப்பரணாக கொண்டு நிலைத்துள்ளன என்பது வரலாறு கூறும் உண்மை.
இந்த பாரம்பரியத்தில்தான் இந்த பிரசித்திமிகு விநாயகர் ஆலயமும் இந்த மக்களின் வாழ்வின் தாங்குமடியாக திகழ்வதை இந்த கும்பாபிசேக விழாவும் அதைச் சிறப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள மலரும்.
நான் இந்தியா சென்றிருக்கிறேன். அங்கு பல ஆலயங்களையும் நூலகங்களையும் பார்த்திருக்கின்றேன்.அவை வெறும் ஆலயங்களாகவோ அல்லது வெறும் வாசிப்புக்கே ஆன நூலகங்களாகவோ இருக்கவில்லை. அவை ஒரு சமூககடமையை செய்கின்றன.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு காவிச்செல்லும் கடமையை செய்கின்றன. ஏன் அங்கே எம்மிடம் இல்லாத எம்மைப் பற்றிய வியக்கத்தகு ஆவணங்களும் பேணப்படுகின்றன.
அந்த வகையில்தான் ஆலயங்களிலோ அல்லது பள்ளிகளிலோ அறநெறி ஸ்தாபனங்களிலோ வெளியிடப்படும் மலர்கள் அந்த மக்களின் காலத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணமாக மாறவேண்டும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இந்த ஆலயத்தில் வெளிவந்துள்ள இந்த இந்த நெய்தல் நிலத்தின் பக்தி இலக்கியத்தின் ஒரு வடிவமாக காலத்தில் வரலாற்றை தேடுகின்றவர்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.














