| | 13.08.2014 - புதன்கிழமை
யாழ்.வடமராட்சி மருதங்கேணி விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த கடற்படை சிப்பாய் இருபத்து இரண்டு வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த போது அந்தப் பெண் கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து சம்மந்தப்பட்ட கடற்படைச் சிப்பாயை பிடித்து தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளர் சிறி ரங்கேஸ்வரனுக்கு மருதங்கேணி மக்கள் அறிவித்துள்ளனர். அவ்விடத்துக்கு விஜயம் செய்த ரங்கேஸ்வரன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு எடுத்துக்கூறியதைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருடன் உடனடியாக தொடர்பு கொண்டு மேற்படிச் சம்பவம் தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமற்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றபோது அது எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதிருப்பதற்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னர் திருடன் என்று கருதியே பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். விசாரணைகளின் பின்னரே குறிப்பிட்ட சிப்பாய் கடற்தொழிலாளியின் வீட்டினுள் புகுந்து பெண்ணிடம் முறைகேடாக நடக்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் கடற்படைச் சிப்பாயை ஒப்படைத்துள்ளனர். பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சிப்பாயை பளை மருத்துவமனையில் சேர்த்துள்ள பொலிஸார் அவர் மீது மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக