வியாழன், 12 ஜூன், 2014

சட்டவிரோத கடற்றொழில் முற்றாகத் தடை உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் பணிப்பு



யாழ்.குடாநாட்டில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழிலாளர் திணைக்களப் பணிப்பாளருக்கும், கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் இன்றைய தினம் பணிப்புரை வழங்கியுள்ளார். 

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் இன்றுமாலை பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்தார்.

சட்டவிரோதமாக கடற்றொழில்களில் ஈடுபடுவோரினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கென மூவர் கொண்ட குழுவினை அமைத்துள்ள அமைச்சர் அவர்கள் இக்குழு கடற்படையினர் பொலிசார் மற்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணித்துள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கடற்றொழிலாளர்களைத் தடுப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வான் அகழ்வுப் பணிகள் தொடர்பில் இங்கே விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போது முனை பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வெளிச்சவீடுகள் புனரமைப்பு தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டதுடன், காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், ஆகிய பதிகளில் வெளிச்ச வீடுகளை அமைக்க இனங்காணப்பட்டுள்ளதுடன் வெற்றிலைக் கேணி மற்றும் குடாரிப்பு பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், தற்போது குருநகர் மற்றும் இன்பசிற்றி ஆகிய பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் புதிய மீன்பிடித்துறைமுகங்களை அமைப்பது குறித்தும் வரலாற்று ரீதியிலான மீன்பிடித்துறைமுகங்களை மீளப் பெறுவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோத கடற்றொழில்களை நிறுத்துவது என்றும் மண்ணெண்ணை மானியத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்களம் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர் பற்றாக்குறை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், கடற்றொழிலாளர்களுக்கு வங்கிக்கடன் பெற்றுக் கொடுப்பது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், பருத்தித்துறை கிழக்கு பிரதேச செயலர் திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலர் சிவசிறி, பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை உயரதிகாரிகள், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சம்மேளன சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை: