தாயகத்தின் நாளைய சிறார்களின் வாழ்வை முன்னேற்றும் அன்புத்துளிர் அமைப்பின் பணிகள் வடமராட்சி கிழக்கில் வைபவரீதியாக சனிக்கிழமையன்று ஆரம்பமானது
புலம்பெயர்ந்து வாழும் உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள துளிர்விடும் தளிர்களுக்கு கரம்கொடுப்போம் என்ற மகுடத்திலான அன்புத்துளிர் அமைப்பு வடமராட்சி கிழக்கு தாளையடியில் தன்னுடைய நாளைய எமது சிறார்களின் வாழ்வை மேம்படுத்தும் முகமாக உதவிகளையும் வழங்கிவைத்தும் கௌரவித்தும் தன்னுடைய வைபவரீதியாக ஆரம்பித்தது.
லங்காசிறி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி 1.3 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான பணத்தை அன்புத்துளிர் தொண்டு நிறுவனம் ஊடக வழங்கியிருந்தது.
ஒதுக்கப்பட்ட தொகையின் ஒரு பகுதியை முதற்கட்டமாக வடமராட்சி கிழக்கில் வழங்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வு பருத்தித்துறை பிரதேசசபை ஊடாக மேற்கொள்ளப்பட்டு இப்பணிகளுக்கான வைபவத்திற்கு பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் சஞ்சீவன் தலைமை தாங்கியதுடன், பருத்தித்துறை பிரதேசசபையின் செயலாளர் மற்றும் பணியாளர்கள் முன்னின்று நடத்திய இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் அ.அ. நடராசா கலந்துகொண்டார்.
சிறப்பு அழைப்பாளராக த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்பிக்க கௌரவ விருந்தினர்களாக நகரசபையின் நகர பிதா அ.அனந்தராஜ், வடதெற்குமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் பொ.வியாகேசு, கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் நா.வை.குகராசா, வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், த.தே.கூட்டமைப்பு பிரதேச அமைப்பாளர் குமாரசாமி, பிரதேச சபைகளின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச பிரதிநிதி எ.ஸ்ரனிஸ்லாஸ், வடமராட்சி கிழக்கு கிராமங்களின் அமைப்பு பிரதிநிதிகள், பெற்றார்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துளிர்விடும் தளிர்களுக்கு கரம்கொடுக்கும் அன்புத்துளிர்கள் அமைப்பினால் நிகழ்வில் முதலில் வடமராட்சி கிழக்கில் கடந்த ஆண்டு நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டு பணம் வைப்புச்செய்யப்பட்ட வங்கிப் புத்தகமும் மற்றும் பாடசாலை உபகரணங்களும் பரிசளிக்கப்பட்டன.
தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட பொருளாதார வறுமை காரணமாக கல்வியை தொடர சிரமப்படும் மாணவர்களுக்குமாக ஐம்பது பேருக்கு பண உதவிகள் வழங்கப்பட்டன. சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பாயிரம் ரூபாவிற்கு மேல் அன்புத்துளிர்கள் அமைப்பால் வடமராட்சி கிழக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்
மாணவ சமுதாயத்தை சந்திப்பது மிக மகிழ்ச்சியானது. ஏனெனில் இவர்கள்தான் நாளை எமது தேசத்தை நிர்வகிக்கப் போகின்ற சக்திகள். அந்த வகையில் மாணவர்களின் நலனில் அக்கறைகொள்ள வேண்டியது இன்றைய மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகின்றது.
மாணவ சமுதாயத்தை சந்திப்பது மிக மகிழ்ச்சியானது. ஏனெனில் இவர்கள்தான் நாளை எமது தேசத்தை நிர்வகிக்கப் போகின்ற சக்திகள். அந்த வகையில் மாணவர்களின் நலனில் அக்கறைகொள்ள வேண்டியது இன்றைய மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகின்றது.
நலிவுறும் சிறார்களை கைகொடுத்து தூக்கிவிட வேண்டியதும். நெருக்கடிகளுக்கும் சாதனை படைக்கும் மாணவர்களை கௌரவிக்க வேண்டியதும் நம் காலப்பணி. அந்த வகையில்தான் இக்காலப்பணியை துளிர்விடும் தளிர்களுக்கு கரம்கொடுப்போம் என்ற மகுடத்தின் கீழ் அன்புத்துளிர்கள் அமைப்பு புலம்பெயர் மண்ணில் இருந்து முன்னெடுத்துள்ளது.
ஆயினும் ஒரு சமுதாயத்திற்கான நற்காரியத்தை செய்வதற்கு இங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளும் விதிகளும் மிகவும் வெட்கப்பட வேண்டியவையாக இருக்கின்றது.
எம் கண்முன்னே ஒரு பாடசாலையின் கட்டிடம் இருக்கிறபோதும். மாணவர்களுக்கு கௌரவம் செய்கின்ற நிகழ்வை ஒரு கொட்டகை போட்டு வெயிலிலும் மழையிலும் மாணவர்களையும் இருக்கவிட்டு மிகவும் சிரமங்களுடன் செய்கின்ற சூழலை தமிழர்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்நிகழ்வை பாடசாலையில் நடத்தினால் அப்பாடசாலையின் அதிபர் விசாரணை செய்யப்படுவார். இதுதான் இந்த நாட்டினுடைய ஜனநாயகம் இலங்கையில் தென்மாகாணங்களில் எங்காவது பாடசாலை மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு பாடசாலை தாழ்வாரத்திலே நடக்குமா. ஆனால் இங்கே நடக்கின்றது. இதுதான் வடக்கின் வசந்தத்தின் உண்மை நிலை.
ஆயினும் இத்தகைய அடக்கு முறைகளை கண்டு துவண்டு போகப் போவதில்லை. எமது இறைமைக்கான உரிமை முன்னெடுப்புகள் தொடரும். நமது பலமாக அன்புத்துளிர் போன்ற அமைப்புக்கள் பின்னின்று எமது சமுதாயத்திற்கு உதவி புரியும் என்ற அசையாத நம்பிக்கை எமக்கு உண்டு.
அப்துல்கலாம் மாணவர்களை பார்த்து சொன்னதுபோல அர்த்தமுள்ள கனவுகளை நெஞ்சிலே சுமக்கின்ற மாணவர்கள் இங்கே வளரவேண்டும். இதைத்தான் உலக தமிழச் சமுதாயமும் நம்மிடம் வேண்டி நிற்கின்றது. என்றார்
இங்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநி ஸ்ரனிஸ்லஸ் கருத்துக் கூறுகையில் சுமார் 53 கிலோமீற்றர் நீளமான இப்பிரதேசம். கவனிப்பாரற்று கிடக்கின்றது. 5 தடவை பெரும் இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளது.
சுனாமி என்ற பேரனர்த்தத்தால் 856 பேரை பலி கொடுத்து 2000 பேர் வரையில் ஊனமாகியவர்களை சுமக்கின்ற மண்ணாக வடமாராட்சி கிழக்கு மண் இருக்கின்றது.
பட்டணப் பிரதேசத்திற்கு கிடைக்கின்ற வசதிகள் இங்கு கிடைப்பதில்லை. பௌதீக வளப்பற்றாக்குறை இங்கு பெருமளவில் காணப்படுகின்றது. இவை நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
பெரும்பாலான வீதிகள் மிகமோசமான நிலையில் காணப்படுகின்றது. எமது பிரதேசம் மற்றைய பிரதேசங்களைபோல் மிளிரவேண்டுமென கனவு காண்கின்றது. ஆனால் வளப்பற்றாக்குறைகள் அதற்கு தடையாக இருக்கின்றது.
வடமராட்சி கிழக்கிற்கு ஒரு தனியான பிரதேசசபை வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் அக்கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படும் பொருட்டு எமது பிரதேசத்தின் தேவைகளின் ஒரு பகுதி நிறைவுசெய்யப்படும்.
இந்த நிலையில் அன்புத்துளிர் போன்ற அமைப்புக்களின் இத்தகைய கரம்கொடுக்கும் பண்புகள் எமக்கு நம்பிக்கையை தருகின்றது என்றார்.
இங்கு பொருளியல் ஆசிரியர் லோகசிங்கம் உரையாற்றும்போது, நாம் அநேகம் நமது கருத்தாடல்களில் தவறுவிடுகின்ற விடயம் நாம் எமது பொருளாதாரத்தை பேசிக்கொள்வதில்லை.அது பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் உள்ளதா என பார்த்தால் போதுமானதாக இல்லை. எமது பொருளாதாரம் நீண்ட பாரம்பரியம் உடையதை நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம்.
இன்றைய உலக ஒழுங்கு பொருளாதார நலன் அடிப்படையில் சுழல்வதை அறிவீர்கள். இந்த ஒழுங்குதான் நமது வாழ்வியல் உரிமைகளையும் தீர்மானிக்கும் பங்கை ஆற்றும். இடப்பெயர்வுகள் பற்றி அண்மைய நினைவுகளைதான் மீட்டுகிறோம். ஐரோப்பியர் காலம் தொட்டு பொருளாதார சுரண்டலுடன் கூடிய இடப்பெயர்வுகளை நாம் சந்தித்தே வந்திருக்கிறோம். இன்றும் நமது பொருளாதாரம் சுரண்டப்படுகின்றது.
இலங்கையில் பெரும்பகுதி கடல் வளம் எங்களின் ஆட்புல உரிமைக்கானதாக இருக்கின்றது. இன்று அது நமக்கானதாக அன்றி குறுக்கப்பட்டு இருக்கின்றது. நமது கடல் சார்ந்த பொருளாதாரம் நமக்கு முழுமையாக கிடைக்குமாயின் இப்பிரதேசங்களின் வளர்ச்சி ஆச்சரியம் மிக்கதாக இருக்கும். ஆனால் விரிந்த வளத்தை கண்முன்னே வைத்துக்கொண்டு நமதுமக்கள் கையேந்த நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது. நமது நமது பொருளாதாரம் இன்றும் பெருமளவில் சுரண்டப்படுவதை உணர்த்துகின்றது.
இன்று மகிந்த சிந்தனையின் திட்டங்களின் அபிவிருத்திகள் தமிழ் பகுதிகளுக்கு கசிவதாக கூட தெரியவில்லை. கிளிநொச்சி மண் போகிற போக்கைப் பார்த்தால் சிங்கள மயப்பட்டு வேறொருவனின் நகரமாக மாறுகின்ற ஆபத்து நிகழ்கின்றது. என்றார்.
அத்தோடு அடுத்த கட்டமாக ஏனைய பகுதிகளில் அன்புத்துளிர் தனது பணிகளை மேற்கொண்டு பலருக்கு உதவிகளை வழங்கும் என தெரவித்துள்ளது.
Sivagnanam Shritharan (MP)
http://www.anputhulir.org/
அன்புத்துளிர்Phone:
அன்புத்துளிர்Phone:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக